Monday, October 27, 2014

1. சரஸ்வதியின் கோபம்

"நாராயண! நாராயண!"

சத்யலோகத்தில் அமைதியான சூழ்நிலையில் அமர்ந்து தன்னை மறந்த நிலையில் வீணையை மீட்டிக்கொண்டிருந்த  கலைமகள் தலை நிமிர்ந்தார்.

முடிச்சிடப்பட்ட தலையும், தம்புரா ஏந்திய கையும், புன்னகை சிந்திய முகமுமாக எதிரே நின்றார் நாரதர்.

வீணையை மெதுவாகக் கீழே வைத்த சரஸ்வதி தேவி, தனது மகனைப் பார்த்து இலேசாகப் புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் ஒளி இல்லை.

"என்ன தாயே, பேசவே மாட்டேன் என்கிறீர்கள்? வந்தவனை வா என்று கூட வ்ரவேற்க மாட்டீர்களா?" என்றார் நாரதர்.

சரஸ்வதி ஒரு நெடிய பெருமூச்சுவிட்டார். "இது உன் வீடுதானே? உன் வீட்டிற்கு வந்த உன்னை உன் தாயான நானே வரவேற்க வேண்டுமா?"

"என்ன தாயே, அப்படிச் சொல்கிறீர்கள்? நான் வீட்டில் தங்கும் பிள்ளை இல்லையே! மூவுலகையும் சுற்றி வருபவன். நெடுநாள் கழித்து வீட்டுக்கு வந்திருக்கிறேன். மகனைப் பார்த்த உற்சாகம் கூட இல்லையே உங்களிடம்? அது சரி, தந்தையார் எங்கே?"

"அவர் வைகுண்டத்துக்குப் போயிருக்கிறார். திருமாலைப் பார்த்துப் பல நாட்கள் ஆகி விட்டனவாம்!"

"ஏதேது, அப்பாவுக்கு ஓய்வு கூடக் கிடைக்கிறதா என்ன? முன்பெல்லாம் படைப்பதற்கே அவருக்கு நேரம் சரியாக இருக்குமே!"

"அதெல்லாம் முன்பு. இப்போதுதான் பூலோகத்து மனிதர்கள் குடும்பக் கட்டுப்பாடு என்று ஆரம்பித்து விட்டார்களே, அதனால் உன் தந்தைக்கு வேலை மிகவும் குறைந்து விட்டது!"

"என்ன ஆச்ச்ரியம்!" என்று வியந்தார் நாரதர். "அங்கே கைலாயத்தில் சிவபெருமான் தனக்கு நாளுக்கு நாள் வேலை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறார்!"

"அது கிடக்கட்டும். நீ காரியமில்லாமல் இங்கே வந்திருக்க மாட்டாயே? என்ன் விசேஷம்?" என்றார் வாணிதேவி.

"சில நாட்களாகவே  நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று கேள்விப்பட்டேன். அதனால்தான் உங்களைப் பார்க்க வந்தேன். ஏன் அம்மா, உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?" என்றார் நாரதர் கவலை தோய்ந்த குரலில்.

சரஸ்வதி பதில் சொல்லவில்லை. மீண்டும் வீணையை எடுத்து மீட்ட ஆரம்பித்தார். அதில் சோகம் தொனித்தது.

"உங்கள் மனநிலை சரியாக இல்லாததால் எத்தனை கஷ்டங்கள் நேர்ந்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா அம்மா?"

சரஸ்வதி மீண்டும் வீணையைக் கீழே வைத்தார். ஆனால் ஒன்றும் பேசவில்லை.

"பூலோகத்தில் இப்போதெல்லாம் நிறைய பேர் பரீட்சைகளில் தேற முடியாமலும், போதுமான மதிப்பெண்கள் பெற முடியாமலும் மிகவும் கஷ்டப்ப்படுகிறார்கள். பரிட்சையில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் மனம் வைக்காததால்தானே அம்மா இத்தனை பிரச்னைகள்?"

"அதற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்று சீறினார் சரஸ்வதி.

"அம்மா! நீங்கள் என்னை விட அறிவிலும் வயதிலும் பெரியவர்கள். உங்களுக்கு நான் புத்தி கூறத் தகுதியற்றவன் தான். ஆனாலும் அது என் கடமை. பூலோக மக்களுக்கு அறிவு புகட்டுவதுதானே உங்கள் கடமை? அதிலிருந்து தாங்கள் வழுவலாமா? தந்தையாரிடம் கூடத் தாங்கள் மிகவும் அலட்சியமாக நடந்து கொள்கிறீர்களாமே? அவர் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார்."

"அவரே உன்னிடம் சொன்னாரா?" என்றார் சரஸ்வதி.

"ஆம் அம்மா! என்னை மன்னிக்க வேண்டும். நான் அவரைச் சந்தித்து விட்டுத்தான் வருகிறேன். உண்மையில், இப்போது மும்மூர்த்திகளும் இப்போது வைகுண்டத்தில் கூடித் தங்களது போக்கில் ஏற்பட்டுள்ள மாறுதலைப் பற்றித்தான் விவாதிதுக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்."

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் கொஞ்சம் கொஞ்சமாக அவர் சொன்ன விஷயங்கள் சரஸ்வதியின் மனதில் கவலையைத் தோற்றுவித்தன. தன்னால் இத்தனை பேர் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அவருக்கு வருத்தமாக இருந்தது.

"உங்கள் மனதில் ஏதோ பெரும் துக்கம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அம்மா, தயவு செய்து அதை என்னுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாதா?"

வெண்தாமரை செந்தாமரை ஆயிற்று. சரஸ்வதிதேவியின் முகத்தில் ஏன் இந்தத் திடீர் மாறுதல்?

"வேண்டாம் நாரதா1 அதெல்லாம் உனக்கெதற்கு?" என்றார் கலைமகள்.

"இல்லை அம்மா. நீங்கள் சொல்லித்தான் ஆக வேண்டும். சந்தோஷத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளும் தாங்கள், துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள மறுப்பது சரியல்ல. அதுவும் தங்கள் அருமை மகனான என்னிடம் கூடச் சொல்லக்கூடாதா?" என்று இறைஞ்சினார் நாரதர்.

"சொல்கிறேன்" என்றார் சரஸ்வதி.
*                                               *                                          *                                          *

தேவலோகத்தில் ஒரே குதூகூலம். தேவர்கள் எல்லாம் கையில் அமிர்தக் கோப்பைகளுடன் ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார்கள். காக்கும் கடவுளாகிய திருமால், பூலோகத்தில் இன்னொரு அவதாரத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு திரும்பியதை தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

நீளமான அந்த அரங்கில், நடுநாயகமாக ஒரு அலங்கார மேடை அமைக்கபட்டிருந்தது. மேடையைச் சுற்றி நான்கு புறமும் தேவர்களும், முனிவர்களும் அமர்ந்திருந்தனர். மேடையின் மீது மனதைக் கவரும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றவாறிருந்தன.

தேவலோக நங்கைகள் ஒவ்வொருவராக மேடையில் தோன்றி நாட்டியமாடினர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்திலேயே ஆடுவதாக எண்ணிக் குதித்தனர் தேவர்கள்.

இறுதியாக ரம்பை தோன்றினாள். தேவர்களின் கரகோஷம் விண்ணை எட்டியது. அரைமணி நேரத்துக்கு மேல் அவள் ஆடிய அற்புதமான நடனம் அவர்கள் கண்களைப் பறித்தது; மனங்களை ஈர்த்தது; உடல்களை உலுக்கியது!

நாட்டியம் முடிந்ததும், தேவேந்திரன் எழுந்து சென்று ரம்பையின் கழுத்தில் மாலையை அணிவித்தபோது, தேவர்கள் செய்த ஆரவாரத்தைப்போல் அதற்கு முன் அவர்கள் செய்ததில்லை.

கர்வம் கலந்த பெருமிதத்துடன், ரம்பை அரங்கைக் கை கூப்பி வணங்கிவிட்டு மேடையை விட்டு அகன்றாள்.

நடந்தவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சரஸ்வதிக்குச் சிரிப்புதான் வந்தது.

இந்த நாட்டியத்துக்கே இவர்கள் இப்படி மயங்கினால், தன்னுடைய வீணைக்கு, அது தரும் மதுரமான இசைக்கு, அடிமையாகவே ஆகி விட மாட்டார்களா என்ன?

மேடையை நோக்கிச் சென்ற சரஸ்வதியைப் பார்த்து, ரம்பை சிரித்த சிரிப்பில் இருந்த அலட்சியமும், அகம்பாவமும், சரஸ்வதிக்கு எரிச்சலூட்டின.

'அடத் திமிர் பிடித்தவளே! இந்த தேவர்கள் உன்னைப் பாராட்டியதால் இவ்வளவு கர்வம் கொண்டிருக்கிறாயே? இன்னும் சற்று நேரத்தில் இதே தேவர்கள் என் வீணையில் மயங்கிப்போய் பிரமை பிடித்ததுபோல் அமர்ந்திருக்கும் காட்சியைப் பார்த்து உன்னால் வெட்கித் தலை குனியக்கூட முடியாதடி! ஏனென்றால் நீயும் என் வீணையில் மயங்கி சூழ்நிலையையே மறந்து போயிருப்பாயே!' என்று மனதுக்குள் நினைத்தபடியே வீணையை மீட்ட ஆரம்பித்தார் சர்ஸ்வதி தேவி.

ஆனால் சரஸ்வதியின் வீணையிலிருந்து ஒலித்த தெய்வீக இசை எவரையும் ஈர்க்கவில்லை. ஒரு சிலர் சப்தமிடாமல் எழுந்து நழுவ ஆரம்பித்தனர். வேறு சிலர் உட்கார்ந்திருக்கவும் முடியாமல், எழுந்து போகவும் முடியாமல் நிலை கொள்ளாமல் இருந்தனர். சிலர் தங்களுக்குள் குசுகுசுவென்று பேசிக் கொள்ளவும் ஆரம்பித்தனர்.

சர்ஸ்வதி தேவி அதிர்ச்சி அடைந்தார். அதிர்ச்சி உடனேயே கோபமாக மாறியது. ஆயினும் பொறுமையைக் கைவிடாமல் வீணையை மீட்டிக்கொண்டே இருந்தார். ஆனால் அவரது பொறுமை எல்லையைக் கடக்க தேவர்களே உதவி செய்தனர்.

அளவு கடந்த கோபத்தில் கண்களை மூடிக்கொண்டு கைகளை மட்டும் விளையாட விட்டு அற்புதமாக வீணையை மீட்டிக்கொண்டிருந்த சரஸ்வதி அருகில் சலங்கைச் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் திறந்து பார்த்தார். இது என்ன அபஸ்வரம்? வீணையின் நாதம் நின்றது.
 
கண்களைத் திறந்த சரஸ்வதி திடுக்கிட்டார். அருகில் ரம்பை நின்று கொண்டிருந்தாள். சரஸ்வதியைப் பார்த்து இலேசாகச் சிரித்து விட்டு, "தேவி! தாங்கள்  தங்களை மறந்து வெகு நேரமாக வீணையை மீட்டிக் கொண்டிருக்கிறீர்கள். தங்களின் வாசிப்பை நிறுத்தச் சொல்வதில் தேவர்களுக்கு விருப்பமில்லை. ஆனால் அவர்களில் சிலர் என்னை மீண்டும் சற்று நேரத்துக்கு நாட்டியம் ஆடும்படிப் பணித்திருக்கிறார்கள். அதனால்தான்.." என்று இழுத்தாள் விஷமமாகச் சிரித்தபடியே.
 
விருட்டென்று எழுந்தார் சரஸ்வதி தேவி. யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல் சபையை விட்டு வெளியே நடந்தார். ரம்பையின் கால் சலங்கைகளின் ஒலியும், தேவர்களின் ஆரவாரமும் அவரது கோபத்துக்கு விறகாகின.

சரஸ்வதியின் கண்கள் கோவைப் பழமெனச் சிவந்திருந்தன. எதிரில் நின்ற நாரதரின் முகமும் கடுமையாக இருந்தது.

"இதற்கு நீ என்ன சொல்கிறாய் நாரதா?" என்றார் சரஸ்வதி. அவர் குரலில் அனல் கக்கியது.

நாரதர் பணிவுடன், "தங்களை அவர்கள் இவ்வளவு தூரம் அவமதித்திருப்பது எனக்கு அளவு கடந்த சீற்றத்தை உண்டாக்கியிருக்கிறது அம்மா!" என்றார்.

"இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்?"

"அம்மா தங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. நான் வயதிலும், அறிவிலும் மிகவும் சிறியவன். நான் உங்களுக்கு என்ன யோசனை சொல்ல முடியும்?"

"நாரதா இப்படியெல்லாம் மழுப்பாதே!உன் மனதில் ஏதோ ஒரு எண்ணத்துடன் தான் நீ இங்கே வந்திருக்கிறாய். அது என்ன என்று என்னிடம் சொல்வதில் உனக்கு ஏன் இவ்வளவு தயக்கம்?"

"நான் அப்படி எந்த எண்ணத்துடனும் இங்கே வரவில்லை அன்னையே! .....ஆனால் இப்போது உங்களுடன் பேசியபிறகு எனக்கு என்ன தோன்றுகிறதென்றால்..."
:
"என்ன தோன்றுகிறது?"

"இந்த நன்றி கெட்ட தேவர்களுடன் நீங்கள் இனியும் ஏன் இருக்க வேண்டும்? நீங்கள் சிறிது காலம் பூலோகத்தில் போய்த் தங்கினால்தான் இந்த தேவர்களுக்கு அறிவு வரும்." என்றார் நாரதர் பவ்யமாக.

சரஸ்வதி சற்று நேரம் யோசனை செய்தார். "ஆமாம் நாரதா. நீ சொல்வது சரிதான். நான் இப்போதே பூலோகத்துக்குப் போகிறேன். இந்தத் தேவர்களுக்குப் புத்தி புகட்ட எனக்கு இன்னொரு யோசனையும் தோன்றியுள்ளது. பிரம்மதேவர் வந்ததும் அவரிடம் சொல்லி விடு" என்று நாரதரிடம் சொல்லி விட்டுத் தன் சொத்துக்களான வீணையையும் ஓலைச் சுவடிகளையும் எடுத்துக்கொன்டு கிளம்பினார்.

நாரதரின் முகத்தில் ஒரு குறும்புப் புன்னகை தவழ்ந்தது.

(அடுத்த பதிவில் தொடரும்)